×

ரவீந்திரநாத்தை தொடர்ந்து எடப்பாடி, ஓபிஎஸ் பதவிகள் ரத்தாகுமா?..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தேனி: ரவீந்திரநாத் எம்பியாக வெற்றி பெற்றது செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது மிலானி தொடர்ந்துள்ள வழக்குகளிலும் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் வேட்பு மனுத்தாக்கலில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகமாக செலவு செய்ததாகவும் கூறி, தேனி மாவட்ட வழக்கறிஞர் மிலானி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் தேனி குற்றப்பிரிவு போலீசார் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவீந்திரநாத்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் மிலானி, சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கலில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாக சேலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியதில் தவறு நடந்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை தேர்தல் கமிஷனுக்கு அளித்து இரட்டை இலை சின்னம் பெற்றுள்ளதாகவும், இதற்கான படிவத்தில் அன்றைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துள்ளதால் அவரை சாட்சியாக வழக்கில் சேர்த்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது. இதேபோல கடந்த 2021ல் ஓ.பன்னீர்செல்வம் போடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் செல்லாது எனவும் மிலானி வழக்கு தொடர்ந்து இவ்வழக்குகளின் விசாரணையும் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சென்னை உயர்நீதிமன்ற தேர்தல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எடப்பாடி, ஓபிஎஸ் பதவிகள் செல்லுமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

* மேல் முறையீடா? ஓபிஎஸ் பேட்டி
தீர்ப்பை தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பில், மேல்முறையீடு செய்யலாம் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். பொது சிவில் சட்டம் குறித்த எனது அறிக்கை நாளை (இன்று) வெளியிடப்படும்’’ என்றார்.

* மொத்தமே 8 பேர்தான்… கேட்டா மறியலாம்…
‘ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர் மிலானியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பெரியகுளம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் 8 பேர் நேற்று தேனி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தென்கரை போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். சொந்த ஊரில் நடந்த மறியலில் வெறும் 8 பேர்தான் பங்கேற்றதால், ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

The post ரவீந்திரநாத்தை தொடர்ந்து எடப்பாடி, ஓபிஎஸ் பதவிகள் ரத்தாகுமா?..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ratham ,Ratah ,Theni ,Edappadi Palanisamy ,O. ,Pannerisselvam ,Rabindra Nam ,Rataku ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை